81 வது பிறந்த நாள் அமெரிக்காவில் இருந்து ஆன்லைனில் கச்சேரி நடத்திய ஏசுதாஸ்
கொரோனா பரவல் காரணமாகப் பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் நேற்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலுக்கு வரவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் இருந்தபடியே அவர் ஆன்லைனில் பக்தி இசைக் கச்சேரி நடத்தி அனைவரையும் நெகிழ வைத்தார்.பழம்பெரும் சினிமா பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ் நேற்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடினார்.
யேசுதாஸ் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகா தேவி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்து விட்டு பின்னர் அங்கு பல மணி நேரம் கர்நாடக இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். கடந்த 47 வருடங்களாக இவர் தன்னுடைய பிறந்த நாளை இப்படித் தான் கொண்டாடி வருகிறார். யேசுதாசின் இந்த இசைக் கச்சேரியை கேட்பதற்காக அவரது பிறந்த நாளின் போது கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமானோர் குவிவது வழக்கம். இந்த வருடமும் அவரது இசைக் கச்சேரி கேட்பதற்காக கொல்லூர் செல்ல ஏராளமானோர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக யேசுதாஸ் இம்முறை தன்னுடைய 47 வருட வழக்கத்தை முதன் முதலாக மாற்றியுள்ளார். இந்த வருடம் தன்னால் கொல்லூர் மூகாம்பிகா கோவிலுக்கு வர இயலாது என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரது ரசிகர்கள் வழக்கமான அந்த நடைமுறையை மாற்ற விரும்பவில்லை. அவருடன் இசைக் கச்சேரி நடத்தும் கலைஞர்கள் வழக்கம் போலவே கொல்லூர் கோவிலில் கச்சேரி நடத்தத் தீர்மானித்தனர். இது குறித்து அறிந்த ஏசுதாஸ், தானும் ஆன்லைன் மூலம் கச்சேரி நடத்த விருப்பம் தெரிவித்தார். இதன்படி நேற்று கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது.
யேசுதாஸ் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள தன்னுடைய வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கச்சேரி நடத்தினார். ஏசுதாசின் கச்சேரியை நேரடியாக பார்க்கவும், கேட்கவும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஆன்லைன் மூலம் அவர் நடத்திய கச்சேரியைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். கச்சேரியை ஆன்லைனில் முழுவதும் பார்த்த பின்னரே அனைவரும் அங்கிருந்து சென்றனர். கோவிலுக்கு நேரடியாக வர முடியாவிட்டாலும் ஆன்லைனில் இருந்தபடியே யேசுதாஸ் தன்னுடைய வழக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்.