மாஸ்டர் : ஒரே தியேட்டரில் 25 லட்சத்துக்கு முன்பதிவு.. வசூலை அள்ளி தரும் தியேட்டர்கள்..
கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக் கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மருத்துவக் குழுவுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது, நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் நாளை மறுதினம் 13ம் வெளியாகிறது. ஆனால் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. 100 சதவீத அனுமதியை விட 50, சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்தார். அடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர். ரவீந்திரநாத் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,திரைத் துறையினரின் அழுத்தத்தால் , தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா பரவும் ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாகப் பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக் கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது.
இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகமும் கொரோனா விதிமுறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் 100 சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் 100 சதவீத டிக்கெட் அனுமதியை வாபஸ் பெற்றது. காட்சிகளை அதிகப்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டது. 50 சதவீத டிக்கெட்தான், அதுவும் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் விஜய் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர். கூட்டம் கூட்டமாக அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தியேட்டரில் திரண்டனர்.59 சதவீத டிக்கெட் என்றாலும் மாஸ்டர் படத்திற்கு வசூல் மட்டும் பஞ்சம் இருக்கப்போவதில்லை என்பது தெரிகிறது. தற்போதைய நிலைமையில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் 20 கோடியைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார் அவுட் ரேட் முறையில் சுமார் 70 கோடி வரை விற்பனை செய்யப்பட்ட மாஸ்டர் ஒப்பந்தம் விநியோக முறைக்கு மாற்றப்பட்டுள்ளது 700 திரைகளில் வெளியாகும்.
இப்படத்திற்கான டிக்கட்டுகள் முதல் ஐந்து நாட்களுக்கும்(மல்டிபிளக்ஸ்/மால் தவிர்த்து) பெரும்பான்மையான திரையரங்குகளில் ரசிகர் மன்றம் சார்பில் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.40 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மாஸ்டர் படத்தைத் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளத் திரையரங்கு ஒன்றில் முதல் ஐந்து நாட்களுக்கு 25 லட்ச ரூபாய்க்கு விஜய் ரசிகர் மன்றம் அனைத்து காட்சிகளையும் ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் வாரம் சுமார் 60 கோடி ரூபாய் வரை மொத்த வசூலை மாஸ்டர் எட்டி வசூல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகும் வசூல் தொடர வாய்ப்புகள் அதிக உள்ளன.