பரபரப்பான கட்டத்தில் சிட்னி டெஸ்ட் இந்தியா வெற்றி பெற 127 ரன்கள் தேவை கைவசம் 5 விக்கெட்டுகள்

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு வெற்றிபெற 41 ஓவர்களில் 127 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியாவின் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன. தேநீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாசில் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலியா பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 244 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் 94 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆடி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 407 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.

சுப்மான் கில் 31 ரன்களிலும், துணை கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 9 ரன்களுடனும், கேப்டன் ரகானே 4 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரகானே அதே 4 ரன்களில் அவுட் ஆனார். இதன் பின்னர் முதல் இன்னிங்சில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர். ஆனால் சதத்திற்கு 3 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 97 ரன்களில் நாதன் லியோனின் பந்தில் கம்மின்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் புஜாராவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் புஜாரா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அஷ்வின் களமிறங்கினார். இருவரும் விளையாடி வருகின்றனர். தேனீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 41 ஓவர்களில் 127 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 5 விக்கெட்டுகளே உள்ளன. இதையடுத்து சிட்னி டெஸ்ட் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

More News >>