பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி எனது மகள் - கமல் உருக்கம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதின் வேதனையை நீங்கள் புரிந்துகொள்ள அவள் உங்களுடைய சொந்த மகளாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாகவும் இருக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் உருக்கமாம பதிவை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள முட்புதர் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா சிறப்பு புலனாய்வுக்குழுவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும், 8 பேர் கொண்ட கும்பலால் ஆசிஃபா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி கடத்தப்பட்டு, கோயில் கருவறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள் என்பது தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியது. தவிர, அம்மாநில பாஜக அமைச்சர்கள் இருவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர்.
மற்றொரு பக்கம் பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த வேதனையை நீங்கள் புரிந்துகொள்ள அவள் உங்களுடைய சொந்த மகளாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாகவும் இருக்கலாம். ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக ஆசிஃபாவைக் காப்பாற்ற தவறியதற்காக நான் கோபம் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, என் மகளே. இந்நாட்டை உனக்கு பாதுகாப்பானதாக நாங்கள் உருவாக்கவில்லை. உன்னைப்போன்ற எதிர்கால குழந்தைகளுக்காகவாவது நான் நீதிக்காக போராடுவேன். உன்னை நினைவு கூர்கிறோம். உன்னை ஒருபோதும் மறக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com