வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..

வேளாண் சட்டங்களை நீங்களே நிறுத்தி வைக்கிறீர்களா? அல்லது நாங்கள் அதற்குத் தடை விதிக்கவா? என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.11) 47வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அமைச்சர்கள் நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன.

கடைசியாக, ஜன.4ம் தேதி மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டம் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மேலும், ஜன.26ம் தேதியன்று டெல்லியை நோக்கி பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பாக இன்று(ஜன.11) விசாரணைக்கு வந்தன.

அப்போது விவசாயிகள் தரப்பில் சீனியர் வக்கீல் துஷ்யந்த் தவே வாதாடும் போது, மத்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் சட்டங்களை ஏன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது? நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி முறையாக நிறைவேற்றி இருக்கலாமே? அதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்றால் அவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? என்று கேள்விகளை அடுக்கினார். மத்திய அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ஜன.26 குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் அணிவகுப்பு நடைபெற உள்ளநிலையில், டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிடுவது மோசமானது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியைச் சீர்குலைப்பதாகும். அதை அனுமதிக்க முடியாது, வேளாண் சட்டங்களின் மீது பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றார்.

தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், மத்திய அரசு, விவசாயிகளின் போராட்டத்தைச் சரியாகக் கையாளவில்லை? இந்த போராட்டத்தில் ரத்தம் சிந்தப்படுவதையோ, வேறு சிரமங்களையோ எப்படி அனுமதிக்க முடியும்? யார் அதற்குப் பொறுப்பு ஏற்பது? பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சனை தீரும் வரை சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் நாங்கள் அதை(சட்டத்துக்கு தடை) செய்கிறோம். இந்தப் பிரச்சனைக்கு இதில் அரசுக்கு என்ன கவுரவம் வேண்டியிருக்கு? என்று கூறினார்.

More News >>