பண முதலைகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க உங்கள் ஓட்டு தேவை : கமல் பேச்சு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அங்கு அவர். பேசியதாவது:நான் செல்லும் இடமெல்லாம் தமிழகம் மாற்றத்திற்குத் தயாராகிவிட்ட சான்று உங்கள் கர்ஜனை மூலம் எனக்கு தெரிகிறது. இது ஒரு சினிமா நடிகரைப் பார்க்க வந்த கூட்டம் அல்ல, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பவர்களின் கூட்டம், நேர்மையாளர்களின் கூட்டம், காசு கொடுத்துக் கூட்டி வந்த கூட்டம் அல்ல என்பதே உங்கள் நேர்மைக்கு அத்தாட்சி.
இது கட்சிகளுக்கு உள்ளான போர் அல்ல, இது நேர்மைக்கும் ஊழலுக்கும் எதிரான போர். உங்களின் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்கவேண்டும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. முதலையை உண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார். இன்று தமிழகத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும் பண முதலைகளைப் பாட்டுப் பாடியெல்லாம் தமிழகத்தை மீட்க முடியாது. இந்த பண முதலைகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும். அதற்கு உங்கள் ஓட்டுத் தேவை. முறையாக ஓட்டுப் போடுபவர்கள் இன்னும் கறை படியாமனம் கொண்டவர்கள். அவர்கள் சாதிப்படி ஓட்டுப்போடாமல் சாதிப்பவர்களைப் பார்த்து ஓட்டுப் போடவேண்டும்.
இது, இளைஞர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும். ஏழையை ஏழையாகவே வைத்திருந்தால்தான் எலக்சன் நேரத்தில் அவர்களைக் குத்தகைக்கு எடுக்க முடியும் என்பதால் ஏழ்மையைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வறுமைக் கோடு என்று எல்லோரும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஆனால், நாங்கள் சொல்வது செழுமைக்கோடு. உங்கள் எல்லோரையும் செழுமைக் கோட்டிற்கும் அதற்கு மேலும் கொண்டு செல்வதுதான் மக்கள் நீதி மய்யத்தின் கனவுத் திட்டம். இங்கு அற்புதமான வாய்ப்புக்கள் உள்ள சிறு நகரங்களும் பெருநகரங்களும் குண்டும் குழியுமாக எங்கு பார்த்தாலும் சாலைகளைத் தோண்டி வைத்திருக்கிறார்கள்.
குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. பக்கத்து மாநிலம் பொறாமைப் படும் அளவிற்கு மழை பெய்துள்ளது. ஆனால் குடிக்கத் தண்ணீர் இல்லை. நீர் மேலாண்மையில் பெயர் பெற்ற தமிழர்கள் இன்று பண வசூல் வேட்டையில் இறங்கிவிட்டதால் நமது பெருமையெல்லாம் பாழாய் போய்விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் சரித்திரத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதை நன்கு பயன்படுத்துங்கள், நாளை நமதாகும். இவ்வாறு அவர் பேசினார்.