பிரதமர் மோடியை விமர்சித்த விமானியை பணிநீக்கம் செய்த கோ ஏர் நிறுவனம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த பைலட்டை கோ ஏர்' விமான நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்திய விமானப்படை முன்னாள் வீரர் பைலட் யுனிஷ் மாலிக் என்பவர் 25 ஆண்டுகள் வி.வி.ஐ.பி படை விமானியாக பணியாற்றியுள்ளார். 2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பெரும் சேதம் ஏற்பட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை கிரேட் நிக்கோபருக்கு அழைத்துச் சென்றது விமானி மாலிக் என்பது திறப்பு அம்சம்.
இதற்கிடையே, கடந்த 2010-ம் ஆண்டு யுனிஷ் மாலிக் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது ஓய்வுக்கு பின் மாலிக், கோ ஏர் ஏர்லைன் விமானியாக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ``பிரதமர் ஒரு முட்டாள். இதை சொல்வதற்காக நீங்கள் என்னை முட்டாள் எனலாம். அப்படி சொன்னாலும் பரவாயில்லை. நீங்கள் சொல்வது எனக்கு ஒரு பொருட்டல்ல. காரணம், நான் ஒன்றும் பிரதமர் கிடையாது. ஆனால் பிரதமர் ஒரு முட்டாள்" என்று பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து இருந்தார்.
மாலிக்கின் இந்த டுவிட்டர் பதிவு, சில மணிநேரங்களில் இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மன்னிப்பு கோரி தனது டுவிட்டரில் பக்கத்தில் மாலிக் , எனது ட்வீட் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துகள். அதற்கும், 'கோ ஏர்' ஏர்லைன் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்று பதிவிட்டு பிரதமர் குறித்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இருப்பினும், இப்படி பட்ட நேரங்களில் தங்கள் நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டிருப்பதாகவும், அதன் ஊழியர்கள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும்" என்று கூறி 'கோ ஏர்' நிறுவனம் மாலிக்கை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.