இழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்!
சமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், பதான் பகுதியில் கோயிலுக்குச் சென்ற 50 வயதுப் பெண்ணை அக்கோயில், பூசாரியும் இன்னும் சிலரும் சேர்ந்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் பிறப்புறுப்பில் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அதேபோல் ஒரு சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள ஹண்டர்கஞ் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் சமீபத்தில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகில் உள்ள பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் அங்கு வந்த மூன்று பேர், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரை தாக்கவும் செய்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடக்க பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பீகாரின் கயாவில் உள்ள அனுக்ரா நாராயண் மகத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக போலீஸில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் வன்கொடுமை செய்த மூன்று பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர். மீதமுள்ள ஒருவரை தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், ``இந்த மூவரில் ஒருவர் அந்தப் பெண்ணின் ஆடு ஒன்றை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் ஆட்டுக்கு இழப்பீடு கேட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அந்த கோபத்தில் இருந்த மூவரும், அவரை பழிவாங்க நினைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மூவரும் கொடூரமாக அந்தப் பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிர் பிழைத்து வந்துள்ளார்" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.