கேரளாவில் தியேட்டர்கள் திறப்பு... நாளை மாஸ்டர் ரிலீசாகிறது ரசிகர்கள் மகிழ்ச்சி
கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. முதல் படமாக பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் ரிலீசாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் 10 மாதங்களுக்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. மார்ச் 11ம் தேதி தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. இன்றுடன் தியேட்டர்கள் மூடி 308 நாட்கள் ஆகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், கேரள பிலிம் சேம்பர் மற்றும் மலையாள திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு சங்கத்தினர் கேரளாவில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது. ஆனால் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்திருந்தது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 10 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுக் கிடந்ததால் கடும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே அரசு சலுகைகள் அளித்தால் மட்டுமே தியேட்டர்களை திறக்க முடியும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து இது தொடர்பாக ஆலோசிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 3 மாதங்களுக்குக் கேளிக்கை வரி ரத்து, மின்சார நிலைக் கட்டணத்தில் சலுகை, சொத்து வரியில் தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன. இதை ஏற்றுக் கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க சம்மதித்தனர்.
பின்னர் கேரள பிலிம் சேம்பர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நாளை (ஜன.13) முதல் தியேட்டர்களை திறக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நாளை கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகிறது. இது சினிமா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. விஜய்க்குக் கேரளாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்தப் படம் ரிலீஸ் ஆவது கேரள தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்திற்குப் பின்னர் 85 மலையாள படங்கள் ரிலீஸ் ஆவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உட்பட முக்கிய நடிகர்களின் 35 படங்களின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.