ஜோ பிடன் பதவியேற்பு.. வாஷிங்டனில் எமர்ஜென்சி.. பாதுகாப்புப் படைகள் குவிப்பு..
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது.கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றியை அறிவிக்காமல் தடுக்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் தனது தோல்வியை மறுத்துப் பேசியதுடன், ஆதரவாளர்களைப் போராடுமாறு தூண்டி விட்டிருந்தார். அதைத் தொடர்ந்துதான் கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலவரத்திற்கு இடையே ஜோ பிடன் வெற்றி அறிவிக்கப்பட்டு விட்டதால், இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப், தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்.
இந்நிலையில், வரும் 20ம் தேதியன்று ஜோ பிடன் புதிய அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்க உள்ளனர். வாஷிங்டனில் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஒடுக்குவதற்காக தற்போது அமெரிக்க பாதுகாப்புப் படைகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பதவியிழக்கும் அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் வரும் 24ம் தேதி வரை நெருக்கடி நிலையை(எமர்ஜென்சி) அறிவித்துள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சிகள் சுமுகமாக நடைபெறப் பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், டிரம்ப் தனது அதிகாரத்தை இழந்து விட்டதால், அமெரிக்காவில் காட்சிகள் மாறத் தொடங்கி விட்டன. வெள்ளை மாளிகை அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகார மையங்களும் மாறி விட்டன. பேஸ்புக் உள்பட சமூக ஊடகங்களில், டிரம்ப்புக்கு ஆதரவாள ஹேஸ்டேக், பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. எனவே, டிரம்ப் ஆதரவாளர்களும் அடங்கிப் போவார்கள் என்று கூறப்படுகிறது.