வேலை பறி போனதால் மனவேதனை... தனியார் பள்ளி பஸ் டிரைவர் ஆட்டோவுக்குள் தீக்குளித்து தற்கொலை
வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் மனமுடைந்த தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த பஸ் டிரைவர், தன்னுடைய ஆட்டோவில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் வருமானம் இன்றியும், வேலை இழந்தும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் மனம் உடைந்து தற்கொலை முடிவைத் தேடிக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதேபோல ஒரு சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகாரியம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (55). இவருக்குப் பிந்து என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஸ்ரீகுமார் அவருடைய வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிந்துவும் அதே பள்ளியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்தப் பள்ளி மூடப்பட்டதால் கடந்த 10 மாதங்களாக இருவருக்கும் சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் திடீரென அந்தப் பள்ளி நிர்வாகம் ஸ்ரீகுமார், பிந்து உள்பட அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்த 84 ஊழியர்களை திடீரென டிஸ்மிஸ் செய்தது. இது ஸ்ரீகுமாருக்கு அடுத்த பலத்த அடியாக அமைந்தது. இதனால் அவர் கடும் மன வேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று முதல் அந்தப் பள்ளி வழக்கம் போல இயங்க தொடங்கியது. இது குறித்து அறிந்த ஸ்ரீகுமார், தன்னுடைய ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றார். ஏற்கனவே மன வேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் பெட்ரோலை வாங்கிக் கொண்டு சென்றார். பள்ளியில் தன்னுடைய நண்பர்கள் பணிக்குச் செல்வதைப் பார்த்து மேலும் மன வேதனை அடைந்த அவர், ஆட்டோவுக்குள் வைத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே ஆட்டோவுடன் சேர்ந்து ஸ்ரீகுமாரும் கருகி இறந்தார்.
இது குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்க முயன்றனர். ஆனால் உயர் அதிகாரிகள் வந்தால் மட்டுமே உடலைக் கொண்டு செல்ல முடியும் என்றும், ஸ்ரீகுமாரின் மரணத்திற்குப் பள்ளி நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கூறினர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஸ்ரீகுமாரின் குடும்பத்தினருக்கு ரூ 15 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாகவும், அவரது மனைவி உள்பட டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்குவதாகவும் தனியார் பள்ளி நிர்வாகம் உறுதியளித்தது. இதன் பிறகே ஸ்ரீகுமாரின் உடலை அங்கிருந்து கொண்டு செல்ல அப்பகுதியினர் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது