தமிழகத்தில் ஜன.19ல் 10, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு..

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.கொரோனா நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலேயே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. குஜராத்தில் நேற்று (ஜன.11) முதல் 10, 12ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஆரம்பம் முதல் பள்ளிக் கல்வித் துறை நீண்ட குழப்பத்தில் இருந்து வந்தது. மற்ற மாநிலங்களில் எல்லாம் பள்ளியிறுதி பொதுத் தேர்வுகளை ரத்து செய்த போது, நாங்கள் தேர்வு நடத்தியே தீருவோம் என்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுத்தது.

ஐகோர்ட் தலையிடவே தேர்வுகளையே ரத்து செய்து, மதிப்பெண் விதிமுறைகளை வகுத்தது.இதன்பின்னர், 10, 12ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா பாதித்ததாகச் செய்தி வரவே, தமிழக பள்ளிக் கல்வித் துறை வழக்கம் போல் பல்டி அடித்தது. இதற்குப் பிறகு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. மாணவர்களுக்கு விடுமுறை விட்டால் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதில்லை. ஊர் சுற்றுவதால் அவர்களுக்குத் தொற்று பரவவே வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளைத் திறங்கள் என்று பெற்றோர்கள் கருத்து கூறினர்.

ஆனாலும், பள்ளிகள் திறப்பதை பெரும்பாலான பெற்றோர் விரும்பவில்லை என்று கூறி, பள்ளி திறப்பை மறுபடியும் தள்ளிவைத்தனர். இந்நிலையில், மீண்டும் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன.12) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பொங்கல் விடுமுறைக்குப் பின்னர், பள்ளிகளைத் திறப்பது குறித்து ஜன.6 முதல் ஜன.8 வரை பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தியதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன.

எனவே, வரும் 19ம்தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு வைட்டமின், ஜின்ங் மாத்திரைகள் வழங்கச் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

More News >>