இனி நான் மனித இனமல்ல... விலங்கினம்: நடிகர் பொன்வண்ணன் வேதனை
இனி நான் மனித இனமல்ல... விலங்கினம் என சொல்லிகொள்வதில் பெருமை கொள்கிறேன்.. என்று 8 வயது சிறுமி அசிஃபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து நடிகர் பொன்வண்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
எட்டு வயது அசிபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது.
அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.
இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் காவல் அதிகாரி ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து பொன்வண்ணன் தனது முகநூல் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்: அதில்,
மிருகங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடும்...!மற்ற மிருகங்களை புணர்ந்ததாகவோ... இதுபோல் விலங்கினத்தில் உள்ள குழந்தைகளை புணர்ததாக அவைகள் நடந்துகொண்டதிற்கு உதாரணம் காட்டமுடியுமா...?
விலங்கினம், பறவையினங்கள்... அதனது குழந்தைகளை எப்படி அன்போடு கவணிக்கிறது, பாதுகாக்கிறது என்பதை பார்த்து அவற்றின்மேல் பெரிய மரியாதை கொள்கிறேன்...
இயற்கையின் விதிப்படி வாழும் அவற்றைவிட,ஆறாம் அறிவு பெற்றவர்கள் என்ற பெயரில்,கடவுளை, மதத்தை காப்பாத்தறேன் என்ற பெயரில் அனைத்து “மதங்களிலும்” உலகம் முழுக்க நடத்தும்இதுபோன்ற கொடூரங்கள் வெறுப்படைய வைக்கிறது...!
கருவறைக்குள் வைத்து நடந்த இந்த கொடூரத்தை 8 நாளாகசாட்சியாக நின்ற அந்த “நம்பிக்கையை” எப்படி பார்ப்பது..? அந்தகுழந்தை வணங்கிய நம்பிக்கையும்...இந்த கொடூரனுக்கு காவல்காத்த நம்பிக்கையும்தான்...இதில் முதல் குற்றவாளிகள்....!இனி உங்கள் சட்டத்தை வைத்து கொடூரன்களை காப்பாற்றி உங்கள் கடவுள்களையும், மதத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்..
இனி நான் மனித இனமல்ல...விலங்கினம் என சொல்லிகொள்வதில் பெருமை கொள்கிறேன்..!
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com