கோலிவுட் ஹீரோ ஜோடியாக கேத்ரினா கைப்.. கோலிவுட், டோலிவுட், சேன்டல்வுட்
ஹீரோக்கள் பாலிவுட்டை குறி வைத்திருப்பதுபோல் தெரிகிறது. பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், நீல் நிதின் முகேஷ், வித்யூத் ஜாம்வால் என பல நடிகர்கள் தென்னிந்திய படங்களில் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார் அமிதாப். அதேபோல் தென்னிந்திய நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்தியில் நடித்திருக்கின்றனர்.
தற்போது அடுத்த தலைமுறை நடிகர்கள் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, யஷ், அல்லு அர்ஜுன், பிரபாஸ் போன்ற சில ஹீரோக்கள் இந்தி படங்கள் மீது குறி வைத்திருக்கின்றனர். கே ஜி எஃப் படம் மூலம் யஷ், பாகுபலி மூலம் பிரபாஸ் இருவரும் இந்தியில் அறிமுகமாகி வசூல் ரீதியாக வெற்றி ஹீரோக்களாகி இருக்கின்றனர். அடுத்து நடிக்கும் கே ஜி எஃப்2 படத்தை யஷும், ராதே ஷ்யாம் படத்தை பிரபாஸும், புஷ்பா படத்தை அல்லு அர்ஜுனும் இந்தியிலும் வெளியிடுகிறார்கள். அதேபோல் நடிகர் விஜய், தான் நடித்துள்ள மாஸ்டர் படம் மூலம் இந்தியில் அதிரடியாக நுழைகிறார்.
ஏற்கனவே தனுஷ் ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிவிட்டார். 2வது படமாக தற்போது அட்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி இந்தியில் நுழைகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்த அந்தாதுன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இதில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா கைப் நடிக்க பேச்சு நடக்கிறதாம். விரைவில் இதுபற்றி தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.