நடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை 21ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு செல்லும் வழியில் பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியதாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் தவிர நடிகையை பலாத்காரம் செய்த சம்பவத்தில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகையின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கை ஒரு பெண் நீதிபதி தலைமையிலான நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால் இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பு வழக்கறிஞரும் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு நீதிமன்றங்களிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுவை முதலில் விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்கு மட்டும் விசாரணையை நிறுத்தி வைத்தது. இதற்கிடையே விசாரணை நீதிமன்றம் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி, பாதிக்கப்பட்ட நடிகைக்காக ஆஜராகி வந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மீண்டும் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் கேரள அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் வேறு ஒரு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து வரும் 21 ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜாமீன் நிபந்தனைகளை மீறிய நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். மேலும் அன்றைய தினம் இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய விபின் லால் என்பவரிடம் விசாரணை நடைபெறும். இது தவிர நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடம் 28ம் தேதி விசாரணை நடைபெறும்.

More News >>