சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்ட அக்கா தம்பிக்கு டிஜிபி பாராட்டு
கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அக்கா தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார். தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) . இவர்கள் செய்த ஒரு செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டனர். அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த அவர்கள் தடுப்புகள் வைக்க முடிவெடுத்தனர். தேவயாணி அங்கிருந்த விளம்பர பதாகை கட்ட பயன்படுத்தும் ஆங்கிளை எடுத்து கால்வாய் மீது வைத்து அதன் மீது பலகை ஒன்றை வைத்து மூடினார். கால்வாய் மூடும் பணியை அக்காள் செய்து கொண்டிருந்தபோது அவர் மழையில் நனையாமல் இருக்க விக்னேஷ் குடை பிடித்தார்.
இந்த காட்சியை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகியதால் அக்காள் தம்பிகளை பலரும் பாராட்டினர். இந்த நிலையில் தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தேவயாணி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோரை நேரில் அழைத்து பாராட்டினார். சமூக பொறுப்புடனும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் செயல்பட்ட தேவயாணி, விக்னேசுக்கு அவர் 2 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கினார். குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.