அவசரநிலை பிரகடனம் செய்த மலேசியா... பின்னணியில் இருக்கும் காரணங்கள்?!

உருமாறிய கொரோனாவை பரவல் காரணமாக மலேசியாவில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைத்து வருகிறது. இருப்பினும், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த உலக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, உருமாறிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, மலேசிய மன்னர் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா அந்நாட்டில் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

தொற்று எண்ணிக்கை குறைவதை பொறுத்து அவசர நிலை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டதால், அரசின் நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கும் நோக்கில், கொரோனவை வைத்து பிரதமர் முகைதீன் அரசியல் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது அவசரநிலை பிரகடனம் கிடையாது. தோல்வியைப் பிரகடனம் செய்துள்ளனர் பிரதமர் முகைதீன் என்று மலேசியா முன்னாள் பிரதமர் மஹாதிர் முகம்மத் மகள் மரினா மஹாதீர் தெரிவித்துள்ளார்.

More News >>