மணிரத்னம் படத்துக்கு பல கோடிகளில் ஒடிடி வாய்ப்பு.. பொன்னியின் செல்வன் ரிலீஸ் நிலை என்ன?
கடந்த மாதம் அண்ணாத்த படப்பிடிப்புகாக ரஜினிகாந்த் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் நயன்தாராவும் நடித்தார். அதேபோல் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்புக்காக ஐதாரபாத்தில் சமந்தா நடித்த காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார். அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து மொத்த ஷூட்டிங்கையும் ஏறக்கட்டி விட்டு ஆளாளுக்கு ஊருக்கு பறந்தனர். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் தொடங்கி இருக்கிறது. இதில் பங்கேற்க முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஐதராபாத் வந்தார். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவும் வந்திருக்கின்றனர். மூவருமே சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வனுக்காக சரத்குமாருடன் ஐஸ்வர்யாராய் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இதற்காக பிரமாண்ட அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன் நடிகை த்ரிஷா சென்னையிலிருந்து ஐதராபாத் சென்றார். பொன்னியன் செல்வன் படப்பிடிப்பில் த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்று நடிக்கின்றனர். மணிரத்னம் தனது லட்சிய படமாக பொன்னியன் செல்வனை இயக்கி வருகிறார், கல்கி கிருஷ்ண மூர்த்தி எழுதிய சரித்திர நாவல் தற்போது படமாகிறது. கொரோனா லாக்டவுனில் மணிரத்னம், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு அளித்த பதிலில், பொன்னியின் செல்வன் இரண்டு பகுதிகளாக உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
அருள்மொழி வர்மன் மற்றும் ஆதித்யா கரிகாலன் ஆகியோரின் சகோதரி குண்டவாய் வேடத்தில் த்ரிஷா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை தியேட்டரில்,வெளியிடாமல் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிட்டால் கோடிகளில் பெரும் தொகை தருவதாக கூறி இருக்கிறது. ஆனால் இதற்கான பதிலை மணிரத்னம் இதுவரை சொல்லவில்லை. 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் திரைக்கு வரவுள்ளது. மணிரத்னம் இப்படத்தை தியேட்டரில் வெளியிட்டு அதன் வெற்றியை சுவைப்பாரா அல்லது ரிஸ்க் இல்லாமல் கேட்கும் தொகையை பெற்றுக்கொண்டு ஒடிடியில் ரிலீஸ் செய்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.