பொங்கல் பண்டிகை கேரளாவில் நாளை 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, பாலக்காடு, இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய 6 மாவட்டங்களில் பெருமளவு தமிழர்கள் வசிக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகைக்கு கேரளாவில் அரசு விடுமுறை எதுவும் கிடையாது.
பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. கடந்த 2014ம் ஆண்டு இதை பரிசீலித்த அப்போதைய உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, வயநாடு, இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகை தினத்தன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.
இதன்படி அந்த ஆண்டு முதல் கேரளாவில் பொங்கல் பண்டிகைக்கு இந்த 6 மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நாளை (14ம் தேதி) இந்த 6 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் மலையாளிகள் அதிகம் வசிக்கும் சென்னை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்பட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.