சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை மாலையில் மகரஜோதி தரிசனம் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலையில் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. இதை தரிசிப்பதற்காக 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாள் 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த திருவாபரணம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. நாளை மாலை 6.30 மணியளவில் இந்த திருவாபரணம் சபரிமலை சன்னிதானத்தை அடையும். பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் சபரிமலை பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். வழக்கமாக மகரஜோதியை தரிசிப்பதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜை தினத்தன்று மகரஜோதியை தரிசிப்பதற்காக கூடுதல் பேரை அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதனால் நாளையும் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வரும் ஜனவரி 19ம் தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மறுநாள் 20ம் தேதி காலை 7 மணியளவில் சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் நடை திறக்கப்படும்.