கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கு பணி நிரந்தரம் அமைச்சருக்கு சினிமா அகாடமி தலைவர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பின்பற்றும் 4 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி கேரள கலாச்சாரத் துறை அமைச்சருக்கு சினிமா அகாடமி தலைவரும், பிரபல மலையாள சினிமா டைரக்டருமான கமல் கடிதம் எழுதியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரளா சினிமா அகாடமி செயல்பட்டு வருகிறது. கேரள அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இந்த அகாடமி இயங்கி வருகிறது. சர்வதேச திரைப்பட விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த அகாடமி நடத்துகிறது. இதன் தலைவர் பதவிக்கு எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சியின் ஆதரவாளர் தான் நியமிக்கப்படுவார்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது கம்யூனிஸ்ட் ஆதரவாளரான பிரபல சினிமா டைரக்டர் கமல் இந்த அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அகாடமியின் செயலாளர் உள்பட முக்கிய பொறுப்புகளுக்கு அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த அகாடமியில் ஏராளமான தற்காலிக ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரிந்து வரும் 4 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி அகாடமி தலைவர் கமல் கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் பாலனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களான 4 பேரையும் பணி நிரந்தரம் செய்தால் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மேலும் பரப்புவதற்கு மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம் தற்போது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அந்த கடிதத்தை சட்டசபையில் வெளியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அகாடமி தலைவர் குறிப்பிட்டுள்ளது ஜனநாயகத்தை மீறிய செயல் என்றும், இது ஏற்கனவே அரசுத் தேர்வாணைய தேர்வு எழுதி பணிக்காக காத்திருப்பவர்களை ஏமாற்றுவதற்கு சமமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கடிதம் வெளியானதை தொடர்ந்து அகாடமி தலைவர் கமலை கண்டித்து காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

More News >>