சபரிமலையில் கடந்த வருட வருமானம் ₹ 300 கோடிக்கு மேல் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இதனால் கேரள அரசிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 100 கோடி உதவி தருமாறு கேட்டுள்ளது. இந்தியாவிலேயே திருப்பதி கோவிலுக்கு அடுத்தபடியாக கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தான் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் திருப்பதி போல தினமும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது கிடையாது. ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும். இது தவிர மண்டல காலத்தில் தொடர்ச்சியாக 41 நாட்களும், மகரவிளக்கு காலத்தில் 20 நாட்களும் மட்டுமே நடை திறந்திருக்கும்.

வருடத்திற்கு 140 நாட்களை விட குறைவான நாட்களில் தான் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். ஆனாலும் வருடந்தோறும் சபரிமலைக்கு 2 கோடிக்கு மேல் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வருமானமும் அதிக அளவில் கிடைக்கிறது. ஒரு வருடத்தில் சராசரியாக ₹ 300 கோடிக்கு மேல் நேரடி வருமானம் வருகிறது. ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால் கோவில் வருமானமும் வெகுவாக குறைந்து விட்டது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலத்தில் தான் சபரிமலையில் வருமானம் அதிக அளவில் கிடைக்கும். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 7 மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் இதுவரை 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் சபரிமலை கோவில் மட்டுமில்லாமல் 1200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் 1,000க்கும் மேற்பட்ட கோவில்களில் வருமானம் மிக மிக குறைவாகும். சபரிமலை கோவில் வருமானத்தை வைத்துத் தான் இந்த கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலையில் வருமானம் கடுமையாக குறைந்ததால் அரசிடம் 100 கோடி உதவி வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுள்ளது.

More News >>