ஈஸ்வரன் பட பிரச்சனை தீர்ந்தது சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்..
நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். பொங்கல் தினமான 14ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் ஈஸ்வரன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதனால் தமிழ்நாட்டு தியேட்டரில் யாரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஆடியோவில் பேசி தகவல் வெளியிட்டார். இதனால் ஈஸ்வரன் படம் தியேட்டரில் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:ஈஸ்வரன் படம் படத்தை நிறுத்தி விட வேண்டும், கடைசி நேரத்தில் ஒரு கழுத்தறுப்பு வேலையைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள் சதி, தடை என்ன காரணம்? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்களை எதிர்த்து நான் போட்டியிட்டுக் கிட்டதட்ட 400 வாக்குகள் பெற்று, கள்ள ஓட்டு போட்டுத்தான் வெற்றி பெற்றார்கள் என்று வழக்கு மன்றத்தில் வழக்கு இருக்கிறது. தியேட்டர்களுக்கு உள்ளாட்சி வரி கூடாது என்று எதிர்த்ததற்காக, விபிஎஃ ப் கட்டணத்தை எதிர்த்ததற்காக, 50 பர்சண்ட் தான் டிக்கெட் அனுமதி என்கிறீர்கள் அப்ப ஏன் நாங்கள் ஜி எஸ்டி முழுமையாகக் கட்டணம் என்று கேட்டேன். பக்கத்து மாநிலம் ஆந்திரா, தெலங்கானாவில் உள்ளாட்சி வரி கிடையாது என்பதால் கேட்டேன். போராடியதற்காக, தேர்தலின் நான் நின்ற ஒரே காரணத்துக்காக அத்தனை கூட்டமும் சேர்ந்து என்னை பழிவாங்க வேண்டும் என்று எடுத்த நடவடிக்கை இது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற ஒரு படம். அந்த பட ரிலீஸின் போது அந்த படத்தை எப்படி, எந்த முறையில் ரிலீஸ் செய்யக் கொடுக்கிறார் என்பது தயாரிப்பாளர் விருப்பம். நடிகர் ஒன்றும் செய்ய முடியாது. அதில் நஷ்டம் வந்தால் நடிகர்தான் ஏற்க வேண்டும் என்று இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. சிம்பரசன்தான் அந்த நஷ்டத்தைக் கொடுக்க வேண்டும் என்று அன்றைக்குத் தலைவராக இருந்த விஷால் பஞ்சாயத்து பண்ணுகிறார். பஞ்சாயத்து என்றால் சிலம்பரசனை எவ்வளவு அவமானப்படுத்த வேண்டுமோ அந்த தயாரிப்பாளர் அவமானப்படுத்தினார். ஒருதலைபட்சமான முடிவு எடுத்தார்கள். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் விநியோகஸ்தருக்கு கட்டிவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். விஷால் மேலும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீதும் இரண்டு விதமான வழக்கு நீதிமன்றத்தில் சிம்பு போட்டிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கடிதம் கொடுத்தும் கூட கடைசி நேரத்தில் ஈரத்துணியைப் போட்டு கழுத்தை அறுப்பது போல் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்கிறார்கள். கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து கடிதம் எழுதுகிறார்கள் .
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலைப் பெறாமல் நீங்கள் எந்த வேலையும் நடத்தக் கூடாது என்று எழுதுகிறார்கள். மைக்கேல் ராயப்பன் மீது வழக்கு இருக்கும் போது, கோர்ட் அவமதிப்பு வரும் என்று தெரிந்தும் அதையும் மீறி கியூபுக்கு கடிதம் எழுதிப் படத்தை நிறுத்த முயல்கிறார்கள். யார் தொழிலையும் முடக்கக்கூடாது என்று காம்பெடிசன் ஆப் இந்தியா கூறுகிறது. நாங்கள் எந்த படத்தையும் தடுக்க முற்பட மாட்டோமென்று இவர்கள் அங்கு ஏற்கனவே பதில் அளித்திருக்கிறார்கள். இன்று அந்த உறுதியை மீறி இவர்கள் எப்படி இந்த முடிவு எடுக்கிறார்கள் என்றால் எனக்கு என்னவென்றே புரியவில்லை.இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.டி.ராஜேந்தருக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதில் அளித்தார்.
ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தை எடுக்கும்போது ஒவ்வொரு தயாரிப்பாளரும் சந்திக்கும் பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் நானறிவேன். நடிகர் சிம்புவை வைத்து “அன்பானவன், அசராதவன், அடங்காதவன்” எனும் படத்தை எடுத்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள். படப்பிடிப்பின் மீது அவர் ஒத்துழைக்காத காரணத்தால் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ்களை மட்டும் வைத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படத்தை வெளியிடுவதால் ஏற்படும் பெரும் இழப்புகளுக்கு ஈடாக அவர் எனக்கு மற்றொரு படம் தருகிறேன் எனக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நம்பிக்கையில் தான் அப்படம் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி படம் சம்பந்தமான அனைத்து விநியோக தளங்களிலும் அப்படம் கடும் இழப்பைச் சந்தித்தது. அப்போது நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினேன். இரு தரப்பிலும் முறையான விசாரணைகளைத் தயாரிப்பாளர் சங்க குழு செய்தது. சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்திரன் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடாக 7.2 கோடி ரூபாய் மூன்று பட ரிலீஸில் செலுத்தப்படும் எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
“அன்பானவன், அசராதவன், அடங்காதவன்” படத்திற்குப் பிறகு வெளியாகும் மூன்று படத்தில் ஒவ்வொரு படத்தின் போதும் 2.4 கோடி செலுத்தப் படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. நடிகர் சிம்பு அந்நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்கள் வேறு விதிகளின் படி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அதனால் அவர் அடுத்ததாக ஒப்பந்தமாகும் அடுத்த படத்திலிருந்து இழப்பீட்டுத் தொகை தரப்படுமெனக் கூறப்பட்டது. அவர் அடுத்து ஒப்பந்தமாகிய முதல் படம் “ஈஸ்வரன்” ஆகும். இதனையொட்டி பத்து நாட்களுக்கு முன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை மற்றும் மதிப்பு குழுவை இந்த விசயத்தில் தலையிடுமாறு முறையிட்டேன். அந்த வகையில் டி.ராஜேந்தர் அவர்களுக்கு ஒப்பந்தம் ஞாபகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் எனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை நான் தடை செய்வதாக குற்றம் சாட்டியதைக் கண்டு கடும் அதிர்ச்சியுற்றேன். இந்த விவாகரத்தில் எனக்காக இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டுமென நான் அழுத்தமும் தரவில்லை இது மிகவும் வெளிப்படையாக அறியப்பட்ட உண்மை. இப்படத்தில் பெரும் இழப்பைச் சந்தித்த விநியோகஸ்தர்களுக்கான இழப்பீட்டுக்காக மட்டுமே முறையிடப்பட்டது என்பதே உண்மை.இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.
இதற்கிடையில் ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் பாலாஜி தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார். இதில் சமரசம் ஏற்பட்டது. படம் இன்று வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஈஸ்வரன் படத் தயாரிப்பாளர் பாலாஜி ஒரு கடிதம் அளித்தார். அதில்,ஈஸ்வரன் படம் சம்பந்தமாக எங்கள் தரப்பில் அளித்த கோரிக்கையைத் தமிழ்த் திரைப்பட சங்கம் ஏற்றுப் படத்தை வெளியீடு செய்ய ஒப்புதல் அளித்தது. மேற்கண்ட படத்தினை ரிலீஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்த சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் ஒத்துழைப்பு தராத சிம்புவிற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நலன் கருதி 13.1.2021 முதல் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப் படங்களுக்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.பல தடைகளைக் கடந்து ஈஸ்வரன் இன்று வெளியாகிறது.