பாகுபலி பட ஹீரோ பூஜையில் கே ஜி எஃப் ஸ்டார்.. நாளை தடபுடல்..
ஹீரோக்கள் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடிக்கவே விரும்புகின்றனர். நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது. பிரபாஸுக்கு தற்போது கே ஜி எஃப் போல் ஆக்ஷன் அதிரடி படம் நடிக்க விரும்பினார். கே ஜி எஃப் பட இயக்குனரிடமே அந்த பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறார்.
சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் 'சலார்' திரைப்படம் வரும் ஜனவரி 15 அன்று, (நாளை) பூஜையுடன் தொடங்குகிறது.விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு வன்முறையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சுவாரஸ்யமான வகையில், தகவல்கள் உண்மையாக இருந்தால் அவர் மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் தோன்றுவார்.
தற்போது வரும் செய்திகளின் படி, 'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இம்மாதம் நாளை 15-ம் தேதி, 11 மணியளவில் படத்தின் பூஜையை நடத்தப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சலார் படக் குழுவினர் கலந்து கொள்ளும் படப்பூஜை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாக்டர். சி.என். அஸ்வத்நாராயண் - கர்நாடக துணை முதல்வர், முன்னணி இயக்குநர் எஸ்.எஸ் ராஜ மௌலி, நடிகர் யாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.இது குறித்து பிரபாஸ் கூறுகையில், "ஹைதராபாத்தில் படப்பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பைத் தொடங்கவும், ரசிகர்களுக்கு என்னுடைய தோற்றத்தை வெளிப்படுத்தவும் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்கிறார்.