எழுதி வச்சுக்கோங்க.. வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்.. ராகுல்காந்தி பேட்டி..
நான் சொல்வதை எழுதி வச்சுக்கோங்க.. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டியிருக்கும் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று(ஜன.14) தமிழகத்திற்கு வந்தார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அவர் நேரில் பார்த்து ரசித்தார். ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ராகுல்காந்தியைச் சந்தித்து அவருடன் உரையாடினார். பின்னர், மதுரையில் இருந்து புறப்பட்ட ராகுல்காந்தி, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பதற்காகவே வந்தேன். ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படவில்லை. மாடுபிடி வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படுகிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்துவதற்கு சில விதிமுறை மாற்றங்கள்தான் தேவையே தவிர, தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மொழி கலாச்சாரத்தை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழர்களின் மொழி உணர்வை அடக்க முயற்சிக்கிறது.
ஆனால், இதை யாராலும் அடக்க முடியாது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை நான் ஏற்கவில்லை. பல மொழி, கலாச்சாரப் பண்பாடுகள் இருப்பதுதான் இந்தியா. தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்கள். நான் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு செயல்படுகிறதே? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் அளித்த பதில் வருமாறு:கண்டுகொள்ளாமல் என்பதை விடப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறாரகள் என்பதே சரி. விவசாயிகளை அழிக்கும் சதியில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகளின் நிலங்களை தங்களது நண்பர்களான 2, 3 தொழிலதிபர்களுக்கு மாற்றிக் கொடுக்க மத்திய அரசு நினைக்கிறது. கொரோனா காலத்திலும் கூட சாதாரண மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது?
இது மக்களுக்கான அரசா அல்லது தொழிலதிபர்களுக்கான அரசா? நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வேளாண் சட்டங்களை மத்திய அரசே திரும்பப் பெற வேண்டியிருக்கும். நான் விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரிப்பேன்.