தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி
தொல்லியத் துறை ஆணையர் டி. உதயசந்திரன் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது: கடந்த 5ம் தேதி மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியம் புதிதாக 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தப் பரிந்துரை செய்துள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தில் முதன் முறையாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் அகழ் ஆய்வுகள் நடைபெற உள்ளன. மாநில தொல்லியல் துறை, பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்பட பல அமைப்புகள் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டு தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்த மாநில அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அதனைச் சுற்றி உள்ள பகுதி, சிவகளை மற்றும் அதன் சுற்று வட்டாரம், கொற்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியிலும் . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறையிலும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகையோடு ஆகிய பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட உள்ளது.
தாமிரபரணி நதி நாகரிகத்தை நிலைநிறுத்தகூடிய வகையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. மற்றொரு கள ஆய்வாக கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிய கற்கால இடங்களை கண்டறிய நடத்தப்பட உள்ளது.தமிழர்களின் பழமையான கலாச்சார பெருமைகளை அறிவியல் முறையில் நிலைநிறுத்த இந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளும், கள ஆய்வுகளும் முக்கிய அம்சங்களாக அமையும். இவ்வாறு உதயசந்திரன் தெரிவித்தார்.