4வது கிரிக்கெட் டெஸ்ட் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தமிழக வீரர் நடராஜன் அரங்கேற்றம்
பிரிஸ்பேனில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் காயமடைந்த அஷ்வின், பும்ரா, ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் ஆடவில்லை. தமிழக வீரர் நடராஜன் இன்று டெஸ்ட் போட்டியில் அரங்கேறி உள்ளார்.ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அடுத்த போட்டியில் அதே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.
இதனால் இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால் 3வது டெஸ்ட் போட்டியின் முடிவு பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. சிட்னியில் நடந்த இந்த 3வது டெஸ்ட் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்திய அணியில் ஜடேஜா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வின் ஆகியோர் காயம் அடைந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிய அவர்களது சாகசமான ஆட்டத்தால் தோல்வியிருந்து இந்தியா தப்பி போட்டியை டிரா செய்தது.
மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஸ்லெட்ஜிங் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்திய வீரர்களுக்கு எதிரான இனவெறி விமர்சனம் ஆகியவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்திய வீரர்கள் பலர் காயமடைந்து இருந்ததால் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் யாரை விளையாட வைப்பது என்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக மாயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
தமிழக வீரர் நடராஜனுக்கு இது அரங்கேற்ற போட்டியாகும். டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1 ரன் எடுத்த நிலையில் டேவிட் வார்னர் சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் மார்க்கஸ் ஹாரிஸ் 5 ரன்களிலும், ஸ்மித் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 42 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறது. முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர். நடராஜனும் அற்புதமாகப் பந்து வீசி வருகிறார்.