நடிகர் புகைபிடிக்கும் காட்சிக்கு மந்திரி எதிர்ப்பு.. படத்திலிருந்து நீக்க வேண்டும்..
திரைப்படங்களில் மதுக் குடிக்கும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். தணிக்கையிலும் அந்த விதி உள்ளது. அப்படி படத்தில் வைக்கப்பட்டால் கூடவே மது குடிப்பது, சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது என்ற வாசகத்தை அக்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அவர் புகைப் பிடிக்கும் காட்சிக்கு சில வருடங்களுக்கு முன் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கட்சி போராட்டம் நடத்தியது. இதையடுத்து தனது படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெறாது என்று ரஜினி காந்த் அறிவித்தார்.
மேலும் தற்போது படங்களில் மது, புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றால் அந்த காட்சிகளில் மது உயிருக்கு கேடு, புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற வாசகங்கள் காட்டப்படுகின்றன.அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் கே ஜி எஃப் 2. இதில் யஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன். சஞ்சய்தத் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் கிளைமாக்ஸ் படப் பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. மும்பையிலிருந்து வந்த சஞ்சய்தத் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
இதன் படப்பிடிப்பு முடிந்தது. சில தங்களுக்கு முன் கே ஜி எஃப்2 படத்தின் டீஸர் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. 100 மில்லியன் தாண்டி யூ டியூபில் வியூஸ் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீஸரில் ஹீரோ யஷ் சிகரெட் புகைக்கும் காட்சி இடம்பெற்றது. பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியின் சூட்டில் சிகரெட்டை உதட்டில் வைத்தபடி பற்ற வைப்பது போன்ற காட்சி டீஸரில் இடம் பெற்றுள்ளது.இதற்குக் கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது, நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இது அவரது ரசிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப் பிடிக்கும் காட்சியை நீக்கினால் அது இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும் என்றார்.
மேலும் கர்நாடக சுகாதாரத் துறை சார்பில் படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில்,புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என்ற வாசகத்தை டீஸரில் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போஸ்டர்களில் இடம் பெறச் செய்யாதது ஏன்” என்று விளக்கம் கேட்டுப் படக் குழுவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.