அனைத்து வீடுகளுக்கும் லேப்டாப், இலவச இன்டர்நெட் கேரள பட்ஜெட்டில் அதிரடி சலுகைகள்

படிக்கும் மாணவர்கள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மலிவு விலையில் லேப்டாப்புகள் வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் என்று கேரள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் உள்பட 5 மாநிலங்களில் இவ்வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு பினராயி விஜயன் அரசின் கடைசி பட்ஜெட் இன்று கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால் இந்த பட்ஜெட்டில் அதிகமாக வரி சுமை இருக்காது என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே கூடுதல் வரி விதிப்புகள் இல்லாமலும், பல அதிரடி சலுகைகளுடனும் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: கைத்தறித் துறைக்கு ₹ 52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்திரி தொழில் துறையில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 75 நாள் வேலை பார்த்த தொழில் உறுதி திட்டத் தொழிலாளர்களுக்குப் பண்டிகை உதவித் தொகை வழங்கப்படும். வேலை இழந்து வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பியவர்களுக்கு ₹ 3000 ஓய்வூதியம், விவசாயத் தொழிலாளர் நலநிதிக்கு ₹ 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் 3 லட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்பு, அடுத்த மாதம் முதல் தொழில் உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நல நல நிதி, வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களுக்குத் தொழில் பயிற்சி அளிக்க ₹ 100 கோடி, புற்றுநோய் மருந்துகளைத் தயாரிக்கத் தனியாக பிளான்ட் அமைக்கப்படும். மூணாறில் ரயில் பாதை அமைக்க டாட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

மாணவர்கள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் லேப்டாப் இருப்பது உறுதி செய்யப்படும். இதற்காகக் குறைந்த விலையில் லேப்டாப்புகள் கொடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 25 சதவீத மானியத்திலும் இவை வழங்கப்படும். மீத தொகையைத் தவணை முறைகளில் அடைக்கலாம். ஏழைகளுக்குக் குறைந்த விலையில் இன்டர்நெட் வழங்கும் கே போன் திட்டம் ஜூலை மாதத்தில் நிறைவடையும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலும் இன்டர்நெட் வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியம் உள்பட அனைத்து நல ஓய்வூதியங்களும் ₹ 1600 ஆக உயர்த்தப்படும். இதுபோன்ற பல முக்கிய அம்சங்கள் கேரள பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

More News >>