கைமாறுகிறது கல்வி நிறுவனம் : ஆகாஷை கைப்பற்றியது பைஜூஸ்
மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை ஆன்லைன் கல்விச் சேவை அளித்துவரும் பைஜூஸ் (Byjus) நிறுவனம் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி டாலருக்கு இந்த விற்பனை நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.பிளாக்ஸ்டோன் குழுமத்தின் ஆதரவுடன் ஆகாஷ் நிறுவனம் கல்விச் சேவையை நடத்துகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் சவுத்ரி .
ஆகாஷ் நிறுவனம் நாட்டின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.. ஆகாஷ் நிறுவனத்தில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.உலகில் கல்வி தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பைஜு நிறுவனத்தின் வின் மதிப்பு 1200 கோடி டாலர் ஆகும். தற்போது கொரோனா தொற்று காரணமாக அந்த நிறுவனத்தின் ஆன்லைன் பாடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது .இந்த ஒப்பந்தம் குறித்து இரு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.பைஜூவுடனான இந்த ஒப்பந்தத்தின்படி, ஆகாஷின் நிறுவனர்களான சவுத்ரி குடும்பம் முற்றிலுமாக விலகிவிடும். அதே சமயம் ஆகாஷில் உள்ள பிளாக்ஸ்டோன் குழுமம் அதன் 37.5 சதவீத பங்குகளில் ஒரு பகுதியை பைஜூவின் பங்குகளுக்காக மாற்றிக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.