மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகள் 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி
மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று டெல்லியில் நடந்த 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களையும் கடந்து தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என்று ஏற்கனவே விவசாய சங்கத்தினர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே சமீபத்தில் வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. புதிய சட்டங்களை ரத்து செய்வோம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும் இது தொடர்பாக ஆலோசிக்க 4 பேர் கொண்ட ஒரு குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.இதற்கிடையே விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 8 கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிவடைந்தது. புதிய சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அரசும், வாபஸ் பெறாமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் சங்கமும் உறுதியாக இருந்ததால் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று டெல்லியில் 9வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தொழில் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் விவசாயச் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சுமுகமான முடிவும் ஏற்படவில்லை. புதிய சட்டங்களை வாபஸ் பெற முடியாது என்றும், தேவைப்பட்டால் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கூறியது. ஆனால் அதை விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கவில்லை. புதிய சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் மத்திய அரசின் காலாவதி முடியும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை வரும் 19ம் தேதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.