சபரிமலையில் மகரஜோதியை பார்க்க பணம் வாங்கி பக்தர்களை கழிப்பறையில் பூட்டி வைத்த கொடுமை

சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்காக 25க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி அவர்களை யாருக்கும் தெரியாமல் கழிப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகச் சபரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்றில் இதுவரை மகரஜோதி தினத்தன்று பக்தர்கள் இந்த அளவுக்குக் குறைவாக இருந்தது கிடையாது என்று சபரிமலை கோவில் ஊழியர்கள் கூறுகின்றனர். மகர ஜோதியைத் தரிசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நேற்று வெறும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் மகரஜோதியைத் தரிசிப்பதற்காக வந்திருந்தனர். கொரோனா பரவல் தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். கேரளாவில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் கடந்த சில வாரங்களாகச் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்குச் செல்லும் போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கொண்டு செல்ல வேண்டும். வழக்கமாகச் சபரிமலை செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் சன்னிதானத்தில் தங்குவது உண்டு. இதற்காக அங்கு ஏராளமான அறைகளும் உள்ளன. ஆனால் இவ்வருடம் சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடந்தது. பக்தர்களுக்குத் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நேற்று தரிசனத்திற்கு வந்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே மகரஜோதியை நேரடியாகத் தரிசிக்க முடிந்தது. இந்நிலையில் மகர ஜோதியைப் பார்ப்பதற்காக சில பக்தர்களிடமிருந்து பணம் வாங்கி அவர்களைச் சபரிமலையில் உள்ள கழிப்பறைகள் மற்றும் ஓட்டலில் ரகசியமாகத் தங்க வைத்திருப்பதாகப் போலீசுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்குள்ள சில கழிப்பறைகளிலும், ஓட்டல்களிலுமாக 25 பேர் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1,000 முதல் 10,000 வரை பணம் வாங்கி தங்க வைத்திருந்தனர். சபரிமலையில் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக ஏராளமான கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் யாருக்கும் தெரியாமல் பக்தர்களை அடைத்து வைத்து வெளியே பூட்டுப் போட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More News >>