கடந்த வருடம் அவசர தேவைக்காக இந்திய ராணுவம் எவ்வளவு தொகைக்கு ஆயுதங்கள் வாங்கியது தெரியுமா?
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.கடந்த வருடம் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் 20 இந்திய ராணுவ ர்கள் வீரமரணம் அடைந்தனர். ஏராளமான வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சீன எல்லையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிரப் பாகிஸ்தான் எல்லையிலும் பதற்றம் நிலவி வருவதால் அங்கும் கூடுதல் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி நரவானே டெல்லியில் கூறியது: கடந்த வருடம் ஜூனில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடி மதிப்பில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
இது தவிர மேலும் 13 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களும், ராணுவத்திற்குத் தேவையான பொருட்களும் வாங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. கடுமையான குளிரிலும் கூட அதிக அளவில் வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இதனால் ராணுவத்தினருக்குச் சிறப்பு உடைகள், பதுங்கு குழிகள், கூடாரங்கள் உள்பட ஏராளமான வசதிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் சிறப்பு உடைகள் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டுள்ளன. இலகுவாக இயந்திரத் துப்பாக்கி, சிறப்பு வாகனங்கள், வீரர்களுக்கான பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவையும் வாங்கப்பட்டுள்ளது.
அதிநவீன தகவல் தொழில் நுட்ப உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன. லடாக்கில் 'ஆபரேஷன் ஸ்னோ லெப்பர்ட்' என்ற பெயரில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், போரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு உதவித் தொகை ஆகியவையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் 32,000 கோடி மதிப்பில் 29 நவீன திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ராணுவம் ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.