தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு டெல்லி விவசாயிகள் சங்க அமைப்பு தலைவருக்கு என்ஐஏ நோட்டீஸ்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவருக்குத் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளது. சீக்கிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளதால் இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய சங்கத்தினருடன் 9 முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. நேற்று நடந்த 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிவடைந்தது. இதற்கிடையே இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருக்கு சில சீக்கிய தீவிரவாத அமைப்பினர் பண உதவி செய்து வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போராட்டம் நடத்தி வரும் ஒரு விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த தலைவருக்குத் தேசிய புலனாய்வு அமைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பைக் கொடுத்துள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக் பலாயி இன்சாப் வெல்பேர் சொசைட்டி என்ற ஒரு விவசாயிகள் சங்கத் தலைவரான பல்தேவ் சிங் சிர்சா என்பவருக்குத் தான் என்ஐஏ நோட்டீஸ் கொடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாத அமைப்பான சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் தலைவர்களில் ஒருவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக பலதேவை விசாரணைக்கு அழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
காலிஸ்தான் அமைப்புகளுக்கு எதிராகவும், அந்த அமைப்பு இந்தியாவில் பல சமூக அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியது தொடர்பாகவும் என்ஐஏ ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுபோல இந்த தீவிரவாத அமைப்பிடம் இருந்து நன்கொடை பெற்ற அமைப்புகளின் பட்டியலை என்ஐஏ தயாரித்துள்ளது. சீக்கிய அமைப்புகள் இதுபோல பல சமூக நல அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி அவர்களையும் தீவிரவாத செயல்பாடுகளில் ஊக்குவித்து வருவதாகவும் என்ஐஏவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.