டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தடுப்பூசி.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி, கோவிஷீல்டு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாகக் கடந்த 2ம் தேதியன்று நாடு முழுவதும் 259 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் மோடி இன்று(ஜன.16) தொடங்கி வைத்தார். மொத்தம் 3006 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, டாக்டர்கள், நர்ஸ்கள் உள்படச் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பணியைத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் செந்திலுக்குப் போடப்பட்டது. தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாகப் போடப்படும். முதல் தடுப்பூசிக்குப் பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

More News >>