திருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்
திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் கணவன் வீட்டு கழிப்பறையில் இளம்பெண் மர்மமான முறையில் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் என்ற பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்.இவரது மகன் சரத் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிரா (24) என்று இளம்பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. சரத் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தையொட்டி அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் இன்று சரத்தின் தந்தை பாஸ்கரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தந்தையை அழைத்துக் கொண்டு கொல்லத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். வீட்டில் ஆதிரா மட்டுமே இருந்தார். இந்நிலையில் ஆதிராவின் தாய் ஸ்ரீனா தன்னுடைய மகளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஆதிராவை காணவில்லை. அவரது செல்போனில் அழைத்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஸ்ரீனா, சரத்தை போனில் அழைத்து விவரத்தைக் கூறினார்.
இதையடுத்து அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றார். இருவரும் சேர்ந்து தேடிப் பார்த்த போது வீட்டுக் கழிப்பறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கழிப்பறைக்குள் ஆதிரா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கையிலும் ரத்தக் காயங்கள் காணப்பட்டன. அவரது உடலுக்கு அருகே ரத்தம் தோய்ந்த ஒரு கத்தியும் கிடந்தது. அதிர்ச்சியடைந்த சரத், அவருக்கு உயிர் இருக்கலாம் என கருதி ஆதிராவை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்லம்பலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு யாராவது வீட்டுக்குள் புகுந்து வரை கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தங்களது மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஆதிராவின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். சுயமாக அவர் கழுத்தை அறுக்க வாய்ப்பில்லை என்றும், வேறு யாரோ தான் அவரை கொன்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.