நடிகை பலாத்கார வழக்கு முக்கிய நடிகரின் குற்றச்சாட்டுகளில் மாற்றம் செய்ய நீதிமன்றம் அனுமதி

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மலையாள சினிமாவில் முன்னணி நடிகை கடந்த 4 வருடங்களுக்கு முன் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பலாத்காரத்திற்குச் சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் என தெரியவந்தது.

இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த பலாத்கார வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தனி நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. எனவே விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை கேரள உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே தன்னை விசாரணை நீதிமன்றம் அவமதித்து விட்டதாக கூறி அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசுத் தரப்பு சார்பில்வேறு ஒரு புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து வரும் 19ம் தேதி முதல் மீண்டும் ரகசிய விசாரணை தொடங்க உள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து நடிகர் திலீப் மீது மேலும் சில புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே நிபந்தனையை மீறி வெளிநாடு சென்ற திலீபின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையும் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

More News >>