காயம் ஒரு தொடர்கதை செய்னி 2வது இன்னிங்சில் விளையாடுவாரா? மருத்துவக் குழு தீவிர முயற்சி
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் பாதி பேருக்கு மேல் காயமடைந்துள்ள நிலையில் நேற்று முதலாவது இன்னிங்சில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னியும் காயமடைந்தார். இதையடுத்து அவர் 2வது இன்னிங்சிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்த இன்னிங்சுக்கு தயார்படுத்த மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் வேதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் போட்டி தொடங்கிய பின்னர் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரும் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறினர். இதனால் தற்போது பிரிஸ்பேனில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் ஆகியோரும், மாயங்க் அகர்வாலும் அணியில் சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே 3-வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த உமேஷ் யாதவுக்கு பதிலாக நவ்தீப் செய்னியும் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் பல அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு நேற்று மேலும் ஒரு அடி கிடைத்தது. முதல் இன்னிங்சில் பந்து வீசிக் கொண்டிருந்த போது நவ்தீப் செய்னிக்கு ம் காயம் ஏற்பட்டது. இவரது தொடையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு உடனடியாக ஸ்கேனிங் செய்யப்பட்டது.இதனால் முகம்மது சிராஜ், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகிய 4 பேரை வைத்து இந்திய அணி பந்துவீச்சை சமாளித்து வந்தது. எனவே அடுத்த இன்னிங்சிலாவது செய்னியை விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணி முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக செய்னிக்கு மருத்துவக் குழுவினர் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். செய்னியால் 2வது இன்னிங்சிலும் விளையாட முடியாவிட்டால் அது இந்திய அணிக்கு பலத்த அடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே இன்று ஆஸ்திரேலியா 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததை தொடர்ந்து இந்தியா முதலாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 44 ரன்களிலும், சுப்மான் கில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு புஜாராவும், கேப்டன் ரகானேவும் ஜோடி சேர்ந்தனர். 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் இன்று ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.