தரம் தாழ்ந்து போன குருமூர்த்தி.. சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி!

சமீபத்தில் துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ``வீடு பற்றி எரிகிறது. கங்கை ஜலத்திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக் கூட வாரி வீச வேண்டும் என்று அருண் ஷோரி சொன்னா். அதனால திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. நாம் அவர்களையும் அணி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அணி உருவாகும் போது அப்படி போயாக வேண்டும்." என்று பேசினார்.

சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியிருப்பது சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக, ``ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த திரு. சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர். அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல! துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது" எனக் கூறியுள்ளார்

More News >>