நாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு
நம் நாட்டின் கவுரவத்தை காயப்படுத்த எந்த சக்தி முயற்சித்தாலும் அதற்கு நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.கடந்த வருடம் ஜூனில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துடன் இந்திய வீரர்கள் கடுமையாக மோதினர். இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய, சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே எந்த நேரத்திலும் போர் ஏற்படும் அபாயமும் உருவானது. இதன் பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து போர் அபாயம் மெல்ல மெல்ல குறைந்தது. ஆனாலும் இப்போதும் இந்திய, சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி எம்.எம். நரவானே மற்றும் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது: சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட மோதலில் நம்முடைய ராணுவத்தின் அபாரமான செயல்திறன் நம்நாட்டின் மன வலிமையை உயர்த்தியுள்ளது. நம் ராணுவத்தின் சிறந்த திறன் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தங்களது தலையை உயர்த்தி கவுரமாக நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
உறுதியான ஒரு முடிவு எடுப்பதற்கும், நம் மண்ணை பாதுகாப்பதற்கும் இந்திய ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது. நம் நாட்டின் கவுரவத்தை யாராவது காயப்படுத்த முயற்சித்தால் அது யாராக இருந்தாலும் அந்த சக்திக்கு நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இவ்வாறு அவர் பேசினார். நாட்டின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் சீனாவை குறிவைத்துத் தான் அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.