தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்கியது. பல இடங்களில் இந்த பணிகள் மிகவும் தாமதமாக துவங்கியிருக்கிறது. காரணம் இந்த தடுப்பூசி போட பலரும் தயக்கம் காட்டுகின்றனர் குறிப்பாக மருத்துவத் துறை ஊழியர்கள் கூட மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர்.இந்தியா முழுவதிலும் சுமார் 3,000 மையங்களில் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடியும் நாட்டின் பல மாநிலங்களில் அந்தந்த முதல்வர்கள் அமைச்சர்கள் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்துள்ளனர். முதல் கட்டமாக முன் களப்பணி யாளர்களுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி மொத்தம் 166 மையங்களில் போடப்படும்என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அவை அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் சுகாதார ஊழியர்கள் மற்றும் நோய் தடுப்பு பணியாளர்கள் மருத்துவர்கள் என 50 சதவீதம் பேர் தடுப்பூசி அச்சத்தால் பெயர்களை பதிவு செய்யவில்லை என தகவல்.

இதற்கிடையே, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி தொடர்பாக பேசுகையில், ``இதுவரை சுமார் 3,000 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டுள்ளது. ஒருநாளில் 100 பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. இலக்கு வைத்து கொரோனா தடுப்பூசி போட போவதில்லை.

எனினும் கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப தடுப்பூசி போடப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.

More News >>