பிரிஸ்பேன் டெஸ்டில் தடுமாறும் இந்தியா முக்கிய விக்கெட்டுகள் சாய்ந்தன
பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால், ரிஷப் பந்த் உள்பட முக்கிய வீரர்கள் இன்று ஆட்டமிழந்தனர். இதையடுத்து இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டம் ஆகும். மூன்று டெஸ்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த இறுதி டெஸ்டில் வெற்றி பெறும் அணிக்கு பார்டர், கவாஸ்கர் கோப்பை கிடைக்கும். இந்நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி கடந்த 15ம் தேதி பரபரப்புடன் தொடங்கியது.
இந்திய அணியில் பல முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் உள்பட புதிய வீரர்கள் களமிறங்கினர். டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. லபுஷேனின் சதத்தால் ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது. இதன் பிறகு இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுப்மான் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரோகித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவும், கேப்டன் ரகானேவும் களத்தில் இறங்கினர். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் நேற்றைய ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா 25 ரன்களிலும், கேப்டன் ரகானே 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் மாயங்க் அகர்வால் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது டெஸ்டில் சிறப்பாக ஆடி 3 ரன்களில் சதத்தை கைவிட்டு, டெஸ்ட் போட்டி சமநிலை ஆவதற்கு காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். 69 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களுடனும், ஷார்துல் தாக்கூர் 12 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்தியா ஆஸ்திரேலியா விட 168 ரன்கள் பின்தங்கி உள்ளது.