ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த புதுச்சேரி!
மத்திய அரசின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜானா திட்டம் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளது. எனினும் சில மாநிலங்களில், அந்தந்த மாநில சுகாதார திட்டங்களே பின்பற்றப்பட்டு வருகின்றன. எனவே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், இணைய அந்தந்த மாநிலங்களின் விருப்பத்திற்கே விடப்பட்டது. இந்த திட்டத்தின் படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை கொண்டு இணையலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள் 5 இலட்சம் வரை மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும். மேலும் இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் இதுவரை இணையாமல் இருந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி, கடந்த புதுன்கிழமை மாநில திட்டத்தோடு ஆயுஷ்மான் பாரத் திட்டமும் ஒன்றாக இணைந்ததாக, புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். இந்த இணைப்பு திட்டமானது மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.
மேலும் மத்திய குடும்பநல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி அனைவருக்கும் வீடு என்ற திட்டமும் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி முதலில் இலக்காக 20,150 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டன. பின்னர் அந்த இலக்கு 15,650 வீடுகளாக குறைக்கப்பட்டு, இந்த இலக்கை அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இலக்கில் 32% அதாவது 4706 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் மின்சார துறை தனியார் மயமாக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் , அதற்கான ஏலம் நடந்து முடிந்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.