எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் இன்று கொல்லம்- திருவனந்தபுரம் பாதையில் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூரு- திருவனந்தபுரம் இடையே மலபார் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் இந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. நேற்றிரவு இந்த ரயில் வழக்கம் போல மங்களூருவில் இருந்து புறப்பட்டது. இன்று காலை 7:45 மணியளவில் இந்த ரயில் கொல்லத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது.
அப்போது என்ஜினுக்கு அடுத்து இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் புகை அதிகரித்தது. இதை கவனித்த அடுத்த பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டியில் தீ எரிவதை பார்த்த அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த பார்சல் பெட்டியில் மோட்டார் பைக்குகள் இருந்தன.
அவை ஒன்றுடன் ஒன்று உரசி பெட்ரோல் டேங்கில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தீ விபத்தில் 3 பைக்குகள் எரிந்து நாசமாயின. பின்னர் தீப்பிடித்த பெட்டியை கழட்டி விட்ட பிறகு 2 மணிநேரம் தாமதமாக அந்த ரயில் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் கொல்லம்- திருவனந்தபுரம் பாதையில் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பயணிகள் தக்க சமயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது