பிரபல நடிகருடன் இணையும் நயன்தாரா..
நடிகை நயன்தாரா கடந்த ஆண்டில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கினர். இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒடிடியில் வெளியானது. இதையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். கொரோனா ஊரடங்கில் இதன் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியும் இதன் படப்பிடிப்பு தொடங்க காலதாமதப்படுத்தி வந்தனர். இறுதியில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது ரஜினிகாந்த் தனி விமானத்தில் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நயன்தாராவும் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்தார். படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த், நயன்தாரா சென்னை திரும்பினர்.
மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. அடுத்த விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்க உள்ளார். இந்நிலையில் புதிய படமொன்றில் பிரபல நடிகருடன் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் நயன்தாரா. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் லூசிபர். இது பெரிய வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். லூசிபர் தெலுங்கு பதிப்பை மோகன்ராஜா இயக்க உள்ளார். இதில் சிரஞ்சீவியுடன் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. ஜனவரி 21 ஆம் தேதி ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
முழுமையான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க விருக்கிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் ஏற்று நடித்த பாத்திரத்தை நயன்தாரா ஏற்க உள்ளார். முன்னதாக இந்த பாத்திரத்தில் நடிக்க சுஹாசினி, விஜயசாந்தி, ஜெனிலியா டிசோசா, குஷ்பு, நதியா மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும் நயன்தாராவின் ஸ்டார் அந்தஸ்து இந்த வேடத்துக்கு சரியானதாக இருக்கும் என்று படக்குழு தீர்மானித்துள்ளது. நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் இன்னும் கையெழுத்திடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா ஏற்கனவே இயக்குனர் மோகன் ராஜாவுடன் தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார்.