இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் அபாரம்
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 336 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 67 ரன்கள் எடுத்தார். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஆஸ்திரேலியா 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் லபுஷேன் அதிகபட்சமாக 108 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக கேப்டன் டிம் பெய்ன் 50 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் அரை சதத்தை தாண்டவில்லை. இந்திய தரப்பில் புதுமுக பந்துவீச்சாளர்களான நடராஜன், ஷார்துல் தாக்கூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய 3 பேரும் இல்லாத நிலையில் அறிமுக பந்து வீச்சாளர்களான நடராஜன், ஷார்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் செய்னி ஆகியோர் சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. சுப்மான் கில் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நேற்று ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 186 இடங்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தனர். ஷார்துல் தாக்கூர் 67 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நவ்தீப் செய்னி 5 ரன்களிலும், சிராஜ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 336 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி வருகிறார்.ஆஸ்திரேலியா இன்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 20 ரன்களுடனும் ஹாரிஸ் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.