பிரபல நடிகை மீது காப்புரிமை சட்ட எச்சரிக்கை.. காப்பி அடித்து 2ம் பாகம் படமா?
சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு திரைக்கு வரும் போது இது தன்னுடைய கதை என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி இயக்கிய விஜய் படங்கள் உள்ளிட்ட பல படங்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்கி கோர்ட் வரை சென்றிருக்கிறது. காப்புரிமை சட்டப்படி இந்த வழக்குகள் தொடரப்படுகின்றன. தற்போது ஒரு படம் மீது படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே எழுத்தாளர் காப்புரிமை எச்சரிக்கை விடுத்திருக்கிறார். காப்புரிமை சட்டசிக்கலில் சிக்கி இருப்பது சர்ச்சை நடிகை கங்கனா ரனாவத். இவர் கடந்த 2 வருடத்துக்கு முன் ஜான்சி ராணி வரலாற்று கதையான மணிகர்ணிகா படத்தில் நடித்தார். இப்படத்தை தமிழில் வானம் மற்றும் தெலுங்கு படங்களை இயக்கிய கிரிஷ் இயக்கினார். படத்தின் இறுதிகட்டம் நெருங்கிய நிலையில் கங்கனாவுக்கும் கிரிஷுக்கும் மனஸ் தாபம் ஏற்பட்டது.
சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டும் என்று கங்கனா கூறினார். அதை கிரிஷ் ஏற்கவில்லை. இதையடுத்து அப்படத்திலிருந்து கிரிஷ் விலகினார். கங்கனாவை இயக்குனர் பொறுப்பை ஏற்று படத்தை முடித்து வெளியிட்டார். தற்போது இப்படத்தின் 2ம்பாகம் உருவாகவிருப்பதாக அறிவித்திருக்கிறார். மணிகர்ணிகா ரிட்டர்ன்ஸ்: தி லெஜண்ட் ஆஃப் திட்டா என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. காஷ்மீரின் முதல் பெண் கலெக்டர் என்று கூறப்படும் திட்டா என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் தான் எழுதிய புத்தகத்தை பார்த்து எடுப்பதாக பிரச்னை கிளப்பி இருக்கிறார் எழுத்தாளர் ஆஷிஷ் கவுல். திட்டா: தி வாரியர் ராணி ஆஃப் காஷ்மீர் என்ற நூலை நான் எழுதி உள்ளேன். அதை பார்த்துத்தான் இந்த படம் உருவாக இருப்பதாக அறிகிறேன்.
இது சட்டவிரோதமான செயல். தேசிய உணர்வுக்கு அடிக்கடி குரல்கொடுக்கும் கங்கனா இப்படியொரு செயல் செய்வது சரியில்லை. இதை அவர் தெரியாமல் செய்கிறார் என்று எண்ணுகிறேன் என்றார். கங்கனா நடித்து வந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த பெரிய படத்துக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். படப்பிடிப்புக்கு இடையில் அவர் சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு அரசியல் மற்றும் பிரபலங்களின் வம்பை விலைக்கு வாங்கு வாங்குகிறார். இதனால் அவர் மீது போலீசில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத உணர்வை தூண்டும் வகையில் சமூக வலை தளத்தில் மெசேஜ் வெளியிட்டதாக அவர் மீது வழக்கு உள்ளது. இதுகுறித்து கோர்ட் உத்தரவு படி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கங்கனா நடித்த வந்த ஜெயலலிதா வாழ்க்கையான தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.