குஜராத்தில் உள்ள படேல் சிலைக்கு சென்னையில் இருந்து புதிய ரயில்.. பிரதமர் தொடங்கி வைத்தார்..
குஜராத்தில் உள்ள மிக உயரமான படேல் சிலை அமைந்துள்ள சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 8 புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. குஜராத்தில் கேவாடியா பகுதியில் நர்மதா ஆற்றின் கரையில் 597 அடி உயரத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒற்றுமையின் சின்னம் என்று அழைக்கப்படும் இந்த சிலைப் பகுதியில் பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்பட பல சுற்றுலாதலங்கள் உள்ளன.
மேலும், சிலையின் உட்பகுதிக்குள் லிப்ட் மூலம் மேலே சென்று நர்மதா ஆறு, மலைப்பகுதிகளை கண்டு ரசிக்கலாம். இந்த சுற்றுலா தலத்திற்கு 8 புதிய ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன.17) தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்சில் அவர் இந்த ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் ஒன்று, சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேவாடியா வரை செல்லும் ரயிலாகும். விழாவில் பிரதமர் பேசும் போது, இன்று புதிதாக விடப்படும்.
ரயில்களில் ஒன்று, கேவாடியாவில் இருந்து சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம் வரை செல்லும் ரயிலாகும். இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளாகும். இந்த நாளில் இந்த ரயில் விடும் நிகழ்ச்சி அமைந்திருப்பது சிறப்பாகும். ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டவர் எம்ஜிஆர் என்று குறிப்பிட்டார். வீடியோ கான்பரன்சில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உ.பி.முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.