குரூப் 1 தேர்வில் குளறுபடி : நிபுணர்க்குழு ஆய்வு
குரூப் 1 தேர்வில் வினா மற்றும் விடை தவறுகள் குறித்து நிபுணர்க்குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை கலெக்டர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் 4 பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் என 66 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது குறித்து கடந்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு, இம்மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வுகள் மாநிலம் முழுவதும் 856 மையங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள வினா விடையில் தவறுகள் இருப்பதாக தேர்வு எழுதிய பலரும் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து வினா எண்கள் 38 ,80, 107 மற்றும் 139 ஆகியவற்றிற்கான விடைகள் இறுதி செய்து அறிவிக்கப்படவில்லை. விடைக் குறிப்புகள் தவறு என குறிப்பிடும் தேர்வர்கள் அதற்குரிய கேள்வித்தாள் எண்ணை பதிவு செய்து, வினா எண்ணையும் பதிவு செய்து தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதனை வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி விடையினை அறிவிக்கும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் அங்கு தடைகளுக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தவறுகள் தொடர்பாக தேர்வர்களிடம் இருந்து 1021 புகார்கள் வந்தன. வினா விடை தவறுகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியில் வெளியிடுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.