நெட் பவுலர்களின் பேட்டிங் சரவெடி வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் படைத்த சாதனைகள் என்னென்ன?
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும். ஆனால் இவர்கள் இருவரும் தங்களுடைய அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டதை யாராலும் நம்ப முடியவில்லை. அவர்கள் படைத்த சாதனைகள் ஏராளம். இந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய இந்தியா, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரோகித் சர்மா, சுப்மான் கில், கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய 6 முன்னணி வீரர்களும் பெவிலியன் திரும்பி விட்டனர். மீதமிருப்பது பந்துவீச்சாளர்கள் மட்டுமே. அதிலும் பெரும்பாலானோர் புதுமுக வீரர்கள்.
எனவே இந்தியா எப்படியும் 250 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்றே அனைவரும் கணக்கு போட்டனர். ஆனால் நடந்ததோ வேறு. 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் இருவரும் 123 ரன்கள் குவித்தனர். இவர்கள் 217 பந்துகளை சந்தித்தனர். 115 பந்துகளை சந்தித்த தாக்கூர் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 67 ரன்கள் குவித்தார். இது தாக்கூரின் வெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மட்டுமே ஆகும். அதுவும் இவர் முதல் டெஸ்ட் போட்டியை 2 வருடங்களுக்கு முன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக தாக்கூர் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அரங்கேறினார். அன்றைய போட்டியில் அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. பேட்டிங் செய்த போது அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை கண்டு மிரளாமல் களமிறங்கிய தாக்கூர், உலகில் நம்பர் 1 பந்து வீச்சாளரான கம்மின்சின் பந்தை சிக்சருக்கு தூக்கி தன்னுடைய ரன் வேட்டையை இவர் தொடங்கினார்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்காக 100வது டெஸ்ட் விளையாடும் சுழற்பந்து வீச்சாளர் லியோனின் பந்தை இன்னொரு சிக்சருக்கு தூக்கி தன்னுடைய அரை சதத்தை இவர் பூர்த்தி செய்தார். இவரது பேட்டிங்கை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களே மூக்கின் மேல் விரலை வைத்தனர். இதிலிருந்தே அவரது பேட்டிங் திறமையை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்திய வீரர்களுக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசுவதற்காகத் தான் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் மற்றும் நடராஜன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக வாய்ப்பு கிடைத்த இவர்கள் 3 பேரும் இந்திய அணிக்கு பெரும் புகழை தேடித் தந்துள்ளனர். மூன்று பேருமே முதல் இன்னிங்சில் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தரும், தாக்கூரும் பேட்டிங்கிலும் சரவெடி நிகழ்த்தியது இந்திய அணியின் போராடும் தன்மைக்கு ஒரு சான்றாக கருதப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் 144 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரின் உதவியுடன் 62 ரன்கள் குவித்தார்.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரங்கேறிய முதல் இன்னிங்சிலேயே 3 விக்கெட்டுகளும், அரைசதமும் எடுக்கும் இரண்டாவது இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1947-48ல் தத்து பட்கர் என்பவர் தான் இந்த சாதனையை முதலில் படைத்தார். அன்று அவர் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ரன்கள் வழங்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் பேட்டிங் செய்யும் போது அவர் 51 ரன்கள் எடுத்தார். 73 வருடங்களுக்கு பின்னர் அந்த சாதனை தற்போது மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுடனான முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 45.1 ஓவர்களில் 7வது விக்கெட்டுக்கு இந்திய வீரர்கள் மொத்தம் 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். அதுவும் 7 இன்னிங்சுகளில் இந்த ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் வெறும் 36.1 ஓவரிலேயே சுந்தர், தாக்கூர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது 7வது விக்கெட்டுக்கு பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் கடந்த 2019 சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், ஜடேஜா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்த பின்னர், 7வது விக்கெட்டில் இந்தியா 50 ரன்களை கடப்பது கூட இதுதான் முதல் முறையாகும். மேலும் 1982க்கு பின்னர் தற்போது தான் இந்தியாவுக்கு வெளியே விக்கெட் கீப்பர் அல்லாத 7, 8ம் இடத்தில் இறங்கிய வீரர்கள் ஒரே இன்னிங்சில் அரைசதம் கடப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1982ல் சந்தீப் பட்டீல் (129*) மற்றும் கபில்தேவ்(65) ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் ஏழாவது விக்கெட்டில் இவர்களது சாதனை 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா (204 ரன்கள்), 2வது இடத்தில் விஜய் ஹசாரே, அதிகாரி (130 ரன்கள்) உள்ளனர்.